தென்காசி மாவட்டம், முத்துமாலைபுரம் ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பகத்தில் நடைபெற்ற தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120வது பிறந்த நாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில், அவர்கள் வசித்த குடும்ப வீட்டில் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூரி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
